Tuesday, 22 January 2013

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

சற்று முன்னே நடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி.
எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தன்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------       

எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூ நுகரும் காலம் - நா முத்துக்குமார்

பூ நுகரும் காலம் - நா முத்துக்குமார்

அவனுக்கு
பூக்கள் என்றால்
பிரியம் அதிகம்

செம்மண் பரப்புகளில்
உண்டு வளர்ந்து
ரசாயணம் துறந்து
கூர் நாசியில்
அவை தரும் மென்வாசம்
சொல்லில் அடங்காது

நாணல்களில்
உயர்ந்து அடங்கி
நீர் ஓவியம் வரைகிற
வெண்பனிப் பொழுது
அவன்
பூ நுகரும் காலம்

ஒவ்வொரு நுகர்வுக்கும்
ஒவ்வொரு வாசம் தர
பூக்களால் மட்டுமே முடியும்

பூக்களுக்கும்
அவனை ரொம்பப் பிடிக்கும்
விரல்களால் உயிர் பறித்து
அவன் நுகர்வதற்கு
முந்தைய கணம்வரை

தத்துவம் - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தத்துவம் - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

காண்பதெல்லாம் இன்பமப்பா!

விதியென்னும் குழந்தை கையில்
உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள்
இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும்
மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும்
வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம்
இன்பமப்பா

விழுங்கித் தொலைத்த மானுடம்!!

"எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த
மானுடம்..

இரந்து இரந்து
கொடுக்கத் திராணியின்றி
வாங்கத் துணிந்த மானுடம்..

களவு செய்து
கபடமாடி
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி
காலம் போக்கும் மானுடம்..

எடுத்து வீசத் துணியாத
விட்டு ஒழிக்க இயலாத
உடலை -
பிடுங்கியும் புலம்பும்
பிரிந்தும் பிறரை நோவும்
சுயநல மானுடம்..

பகுத்துப் பாராத கேள்புத்தி -
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும்
தனக்கு மட்டுமே ஓலமிடும் மானுடம்..

ஆறடி மிஞ்சாத மண் தின்று
காலடி பதியாத வாழ்க்கைக்கு
நோயிற்கும் பேயிற்கும் பயந்து
யாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..

காலம் மென்று மென்று விழுங்கி
விதைத்த விதைப்பில் -
வாழ்ந்த அடையாளமின்றி மாளும்
மானுடமே.. மானுடமே..

எல்லாம் ஒழ்
எல்லாம் அற்
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும்
சுயநலம் குறைத்து வாழ்"
என்று சொல்ல -
எனக்கென்ன உரிமையுண்டோ; உன்னிடத்தில் மானுடமே!!

தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்
மாசியில் மங்களம் சூடிடும்
புது வரவுகள் பொங்கிடும்
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா
தெருவெங்கும் தேரோட்டம்
சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க 
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்
வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்
ஆனியில் உச்சிவெயில் தணியும்
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்
ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும்
ஐப்பசி மழை அடை மழை
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்
கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு
ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும்
மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்

Thursday, 17 January 2013

கோடைக் குளிர்நகர் - வைரமுத்து

கோடைக் குளிர்நகர்

முகிற்குடையின் கீழுறங்கும் சோலை - புல்லில்
முத்தமிடும் பனிமுத்து மாலை - பனித்
துகில்விலக்கிப் பூவழகைச் சுவையாகச் சொல்லத்தான்
சுகமாக விடியுமதி காலை - அதைச்
சொல்லாமல் எனக்கென்ன வேலை?
பொற்சுவட்டுப் பூப்பூமி மீது - மெல்லப்
பூத்த பனி திரைபோடும் போது - நெஞ்சம்
சொற்கனவுப் பந்தலுக்குள் சொக்கிநட மாடிதினம்
சொல்லிவிடும் கற்பனைக்குத் தூது - அதைச்
சொல்லிவைக்க வார்த்தை கிடையாது.
மீனேறி நிலம்பார்க்கும் ஏரி - சுற்றி
மின்வெளியாய் நின்றமலர்ச் சேரி - அங்கே
தேனேறி, தென்றலெனும் தேரேறிப் பனித்தளிர்கள்
திசைபார்க்கும் வரவேற்புக் கூறி - ஆடும்
செந்தோட்டம் மனத்தேரில் ஏறி.
கலைக்கோட்டத் தேனடைகள் பிழிந்து - மெல்லக்
கனித்தோட்டச் சாலைகளில் வழிந்து - அந்த
மலைமேட்டு மலர்ப்பள்ளம், மழைமேகப் பனிவெள்ளம்
மதுபோலச் சொரிவதனால் குளிர்ந்து - பச்சை
மணிபோலச் சிரித்திருக்கும் ஒளிர்ந்து.

அலைகள் - வைரமுத்து

அலைகள்

அலைகளே! நீர்மேல் ஆடுந் தண்ணீர்
மலைகளே! கடலின் மந்திரக் கைகளே! வித்தை புரிந்து வீசுங் காற்று
நித்தந் திரிக்கும் நீர்க்கயி றுகளே!
காற்றெனுங் கயவன் கடலாம் கன்னியின்
மேற்புறம் உரியும் மெல்லிய துகில்களே!
கரையில் தற்கொலைக் காரியம் நடத்தல்
முறையா? சரியா? முடிவுரை என்ன?
கண்வழி புகுந்து கனவென மலர்ந்து
வெண்துகில் போர்த்து மேலே எழுந்து
விம்தித் தாழ்ந்த வெண்மார் புகளே!
தம்பலம் காட்டும் தண்ணீர் வெடிகளே!
கடல்நீர் விழாவில் கரக ஆட்டம்
நடத்தித் தோற்கும் நாடகக் கும்பலே!
கருப்புக் கடலுக் காசநோ யாலே
இருமித் துப்பும் எச்சில் மலைகளே!
கறுப்புக் கடற்றயிர் கடையப் படுகையில்
தெறித்த வெண்ணெய்த் திரைகளே! நீங்கள்
கரையில் கலையும் கடலின் கனவுகள்
கரைக்கன் னத்தில் கடல்முத் தங்கள்
நகர்ந்து விரைந்து நடந்து கரையில்
தகர்ந்து போகும் தண்ணீர்ச் சுவர்கள்

நட்பு - வைரமுத்து

நட்பு

"நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்

மழைக்காலப் பூக்கள் - வைரமுத்து

மழைக்காலப் பூக்கள்

அது ஒரு
காலம் கண்ணே
கார்க்காலம்
நனைந்து கொண்டே
நடக்கின்றோம்
ஒரு மரம்
அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது
இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்
அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது
இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன
சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன
அந்தி மழைக்கு நன்றி
ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.
ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.
எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது
உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன
உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்
அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்
நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?
நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.
அது ஒரு
காலம் கண்ணே
கார்க்காலம்.

கோடுகளும் சித்திரங்களே - வைரமுத்து

கோடுகளும் சித்திரங்களே

என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.
என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்
ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்
என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று
என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்
இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது
தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி
இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது
இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை
சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்
இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்
இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்
நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!
மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.